அதிகாரம் 31

பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?
3 இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
4 தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது
5 ஆகையால் வெளியின் சகல விருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.
6 அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.
7 அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.
8 தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக் கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.
9 அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.
10 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,
11 நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.
12 ஜாதிகளில் வல்லவராகிய அந்நியதேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்துபோனார்கள்
13 விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.
14 தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமைகொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.
15 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குற நாளில் புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அதினிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.
16 நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.
17 அவனோடேகூட இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.
18 இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.